சுயகல்வியைத் தேடி | பழங்குடிகள் வாழ்வுமீட்பாளர். அன்புராஜ் | வாழ்வனுபவப் பகிர்தல்
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- சமூகம் சார்ந்த செயல்களில் தங்களை முற்றளித்து இயங்கும் சாட்சிமனிதர்களுக்கு, குக்கூ குழந்தைகள் வெளி வாயிலாக வருடந்தோறும் 'முகம் விருது' அளித்துவருகிறோம். அவ்வகையில், 2022ம் ஆண்டிற்கான முகம் விருது தோழர் அன்புராஜ் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. பழங்குடி மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும், சிறைக்கைதிகளின் வாழ்வுநிலை நலன்களுக்காவும் தொடர்ந்து பல்வேறு களச்செயல்கள் வழியாக செயலாற்றும் அன்புராஜ் அவர்களின் அர்ப்பணிப்பை வணங்கி இவ்விருது அவருக்கு அளிக்கப்படுகிறது.
'மனந்திருந்துதல்' என்கிற சொல்லின் அர்த்தம் மிக மிக அடர்த்தியானது. அகவலிமையுள்ள மனிதரால் மட்டுமே அதை நேரடியாக எதிர்கொள்ள முடியும். அவ்வார்த்தையின் அர்த்தப்படி தன் வாழ்வமைத்து, நம் கண்முன் நடமாடும் செயல்மனிதர்களுள் தோழர் அன்புராஜ் மிக முக்கியமானவர். ஆகவே, இளையோர்கள் பின்பற்ற வேண்டிய சமகால ஆளுமையென இவரைத் தயக்கமின்றி முன்னுதாரணம் கொள்ளலாம். பெரும் குற்றங்கள் சுமத்தப்பட்டு சட்டத்தால் சிறைதண்டனை பெற்று, அதிலிருந்து விடுதலையாகி, சமூகச்செயல்களை ஆற்றிவரும் இவருடைய வாழ்வு, அதையறிகிற ஒவ்வொரு மனிதருக்குள்ளும் நம்பிக்கையை உண்டாக்குகிறது.
பழங்குடி மக்களின் நிலைமீட்சிக்காகத் தனது வாழ்வினை முற்றளித்து செயற்களத்தில் நிற்கும் இடதுசாரியத் தோழர் வி.பி.குணசேகரன் அவர்களின் சமகாலத்து வழித்தோன்றலாய், அய்யாவுடைய முழுசெயல்வடிவமாக நாங்கள் கருதுவதும் நம்புவதும் தோழர் அன்புராஜ் அவர்களைத்தான். மேலும், மார்க்சியத்தையும் காந்தியத்தையும் அதனதன் நிறைகுறைகளோடு உள்வாங்கி செயற்பாட்டுத்தளத்தில் அவைகளை ஒருங்கிணைத்து பல்வேறு மாற்றுச்சாத்தியங்களை துவங்கிவைப்பராக இவரிருக்கிறார்.
அன்புராஜ் தோழரை எண்ணும்போது மனதிலெழும் முதல்வியப்பு, ஓர் கலைவடிவம் அதையேற்கும் மனிதனை என்னவாக மாற்றுகிறது என்பதுதான்! துயரங்கள் நிறைந்த அனுபங்களைப் பெற்ற ஒரு மனிதரால் எப்படி இவ்வளவு நேர்மறையாகவும் நேர்மையாகவும் இவ்வாழ்வைப் பணிந்தேற்க முடிகிறது? சிறையில் இருந்தபோது இவர் கண்ட கஸ்தூர்பா காந்தியின் கதைநாடகம் இவருடைய வாழ்வில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த காந்தியத்தாக்கம் அளவில்லாத உளவிசையை இவருக்கு நல்கியிருக்கக்கூடும். சிறையிலிருந்த காலங்களில் 'சங்கல்பா' எனும் நாடகக்குழுவினை நிறுவினார். தொடர்ந்த இலக்கிய வாசிப்பினாலும், ஆசிரிய மனிதர்களின் தொடர்பினாலும் தன்னுடைய உள்ளார்ந்த விருப்பத்தைக் கண்டடைந்தார். இவர் விடுதலையாவதற்குள் நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களை நிகழ்த்தியுள்ளார்.
"நம்பிக்கையை அடைவதற்கு நம்பிக்கையின்மை எனும் கொதியுலையைக் கடக்க வேண்டி இருக்கிறது"... தஸ்தாயேவ்ஸ்கியின் வரி இது. தோழர் அன்புராஜ் தன் வாழ்வில் அத்தகையக் கொதியுலையைக் கடந்து, தனக்குரிய கலையையும் வாழ்வையும் கண்டடைந்திருக்கிறார். குக்கூ குழந்தைகள் வெளி அளிக்கும் முகம் விருது வரிசையில் தோழர் அன்புராஜ் அவர்களும் இடங்கொள்வது ஆத்மார்த்தமான மகிழ்வைத் தருகிறது. ஒப்பற்ற செயல்மனிதனின் கரங்களையும் கனவுகளையும் இறுகப்பற்றி அந்நம்பிக்கையை நாங்களும் பெற்றடைகிறோம்.